அரசு வக்கீல்கள் நியமனம் முழுமையாக வெளிப்படைத்தன்மையுடனும், 100 சதவீத நியாயத்துடனும் நடைபெறும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு வக்கீல் நியமனத்தைச் சுற்றி பரவி வரும் முறைகேடு குறித்த தகவல்கள் உண்மையற்றவை என்று கூறினார். இதுவரை நிரந்தர அரசு வக்கீல்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும், நியமனத்தில் பணம் கேட்பவர்கள் குறித்து தகவல் கிடைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், தற்போது மூன்று மாவட்டங்களில் மட்டுமே தற்காலிக அடிப்படையில் ஆறு மாத காலத்திற்கு அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து துறைகளிலும் சீர்திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களை தேவையற்ற ஆய்வுகள் மூலம் சிரமப்படுத்தக் கூடாது என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாகவும், முதலில் துறைகளை சீரமைத்து அதன் பின்னரே முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் கீர்த்தனாவின் சமீபத்திய பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிர்மல்குமார், அவர் தனது சொந்த ஊரின் முன்னேற்றம் குறித்த எண்ணத்தில் சென்றிருக்கலாம் என்றும், அதன் நோக்கம் குறித்து முழுமையான தகவல் தமக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
கரூர் பயணம் தொடர்பாக பேசுகையில், முதல்வர் விஜய் அங்கு சென்று மக்களை நேரில் சந்திப்பார் என்றும், அவரது பயணத்தை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம்சாட்டினார். பொதுமக்களை ஆடம்பரமின்றி நேரில் சந்திப்பதே முதல்வரின் விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
