இந்தியாவுக்கு எதிரான வன்முறை அல்லது குற்றச் செயல்களுக்கு எந்தவிதத்திலும் இடமளிக்க முடியாது என்றும், அவை சட்டப்படி கடுமையாகக் கையாளப்படும் என்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, “நியூசிலாந்து கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் மதிக்கும் ஜனநாயக நாடாகும். ஆனால் அந்தச் சுதந்திரம் சட்டத்தின் வரம்பிற்குள் இருக்க வேண்டும். எந்தவொரு அச்சுறுத்தல், வன்முறை அல்லது குற்றச் செயல்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்றார்.
மேலும், காலிஸ்தான் தொடர்பான பிரச்சினை இந்தியாவில் பெரும் துயரத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருப்பதை தாம் புரிந்துகொள்வதாகவும், அதுகுறித்த வரலாற்றுப் பின்னணி நியூசிலாந்து அரசுக்கு நன்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.
“எங்கள் நாட்டில் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வன்முறை அல்லது மிரட்டல் நடத்த அனுமதி இல்லை. இத்தகைய செயல்கள் இந்தியா–நியூசிலாந்து உறவை பாதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் அவர் கூறினார்.
மேலும், அச்சுறுத்தல் அல்லது வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நியூசிலாந்து காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்தார்.
