தமிழகத்தில் தனது உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வகையில் ரூ.3,250 கோடி முதலீடு செய்யும் போர்டு (Ford) நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் தொழிற்சாலை, சில ஆண்டுகளுக்கு முன்பு செயல்பாட்டை நிறுத்தியது. தற்போது அந்த வளாகத்தை மீண்டும் செயல்படுத்தி, இன்ஜின் உற்பத்தி மையத்தை அமைக்கும் திட்டத்தை நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இந்த முதலீட்டுத் திட்டத்தின் மூலம் சுமார் 600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில், போர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் முதல்வர் விஜயை சந்தித்து, உற்பத்தி மீள்தொடக்கம் மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
சந்திப்பின் போது, போர்டு நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ள உற்பத்தித் திட்டத்திற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்று முதல்வர் விஜய் உறுதியளித்தார். மேலும், மறைமலைநகர் தொழிற்சாலையின் முழு திறனையும் பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் நிறுவன நிர்வாகத்திடம் அவர் வலியுறுத்தினார்.
