விளாத்திக்குளம் தொகுதி எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் விமர்சனங்களை முன்வைப்பவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் இணைய ஆதரவாளர்கள் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், அவதூறு வழக்குகளிலும் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகள் சேர்க்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அவருக்கு தேவையான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது அடிப்படை சட்ட உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் மீறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அரசு கடுமையாக நடவடிக்கை எடுப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய அவர், போலீசார் சட்டத்திற்கும் மனசாட்சிக்கும் இணங்க செயல்பட வேண்டும் என்றும், சட்டத்திற்கு புறம்பான உத்தரவுகளை நிறைவேற்றக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
