புதுடெல்லி: தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகள் உள்ளிட்ட பொதுத் தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் 6 பேர் கொண்ட உயர்மட்ட பணிக்குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
NEET தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டனர். டெல்லி ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், தேர்வு முறைகளில் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை கொண்டு வர குழு அமைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, நந்தன் நிலேகனி தலைமையில் தற்போது உயர்மட்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோமநாத், புலனாய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, முன்னாள் கல்விச் செயலாளர் அனிதா கர்வால் மற்றும் தளவாடப் போக்குவரத்து வல்லுநர் அம்ரித் லால் மீனா ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
தேர்வு நடைமுறைகளில் தொழில்நுட்பம், கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்ய உள்ளது.
மேலும், தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள், தேர்வு நடத்தும் அமைப்புகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை குழு வரவேற்றுள்ளது.
பொதுத் தேர்வு முறைகளை மேம்படுத்துவதற்கான தங்களது பரிந்துரைகளை பொதுமக்கள் செப்டம்பர் 13-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
