பெங்களூரு: கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.187.3 கோடி ஊழல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் பி.நாகேந்திரா தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளார். இதனை பாஜகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
கடந்த 2024-ம் ஆண்டு வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக அதன் கண்காணிப்பாளராக இருந்த சந்திரசேகரன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டதுடன், அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது.
வழக்கின் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் பி.நாகேந்திராவின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்த நாகேந்திரா, மீண்டும் அமைச்சர் பதவியை பெற்றார்.
கடந்த 3-ம் தேதி அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து, பாஜக மற்றும் மஜத எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டப்பேரவை மற்றும் மேலவையில் அமளியில் ஈடுபட்டதுடன், நாகேந்திராவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களையும் நடத்தினர்.
இதனால் காங்கிரஸ் அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், நாகேந்திரா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வால்மீகி ஆணைய ஊழல் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தால் தனது கட்சிக்கும் ஆட்சிக்கும் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், வழக்கில் தான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றும் நாகேந்திரா கூறினார்.
மேலும், வழக்கு முடியும் வரை எம்எல்ஏவாகவும் இருக்க விருப்பமில்லை என தெரிவித்த அவர், தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ததாக அறிவித்தார்.
நாகேந்திராவின் ராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து பெங்களூரு மற்றும் பெலகாவியில் பாஜகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
