திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் சால்வை அணிவிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியது. நாற்காலிகளை வீசி தாக்கிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சி மறுசீரமைப்பு தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மேடையில் இருந்த நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிப்பதற்காக மாநில செயற்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் மேடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவரை மாவட்ட தலைவர் குணசேகரன் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, இருவரது ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து ஒருவரையொருவர் வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் கூட்டம் நடைபெற்ற இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, கட்சியின் மேலிட பார்வையாளர் துரைவேலன் மற்றும் மண்டல பொறுப்பாளர் அருள் பெத்தய்யா உள்ளிட்டோர் தலையிட்டு இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.
பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
