புதுடில்லி: நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டில்லியில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுதந்திர தின விழா டில்லி செங்கோட்டையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார்.
மேலும், ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூரும் வகையில், செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், டில்லி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. டில்லி போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் இணைந்து முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
டில்லிக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ சேவை
சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, டில்லி மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மெட்ரோ சேவைகள் தொடங்கும் வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும் டில்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
