டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள சுரங்கத்தில் திடீரென தண்ணீர் புகுந்து ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சமோலி மாவட்டத்தின் பிப்பல்கோட்டியில் தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சம்பவம் நடந்தபோது சுரங்கத்திற்குள் 18 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சுரங்கத்திற்குள் தண்ணீர் பெருக்கெடுத்து புகுந்தது. தண்ணீரின் வேகத்தில் தொழிலாளர்கள் சுரங்கத்தின் நுழைவுப் பகுதியை நோக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதியில் மண் மற்றும் சேறு குவிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரமாக தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில் இதுவரை 7 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
