சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, பொதுமக்கள் தங்களது சாதியை அரசின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்களை பதிவு செய்யும் முறை தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சாதி என்ற கேள்விக்கான பகுதியை காலியாக வைத்து, மக்கள் தெரிவிக்கும் சாதியின் பெயரை அப்படியே பதிவு செய்யும் நடைமுறை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முறையில் சாதி விவரங்களை சேகரித்தால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.
உட்பிரிவுகளால் ஏற்படும் குழப்பம்
நாடு முழுவதும் பல்வேறு சாதிகளில் ஏராளமான உட்பிரிவுகள் இருப்பதாகவும், அந்த உட்பிரிவுகளின் பெயர்கள் அனைத்தும் அரசின் அதிகாரப்பூர்வ சாதிப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் தெரிவிக்கும் பெயர்களை அப்படியே பதிவு செய்தால், அவை உட்பிரிவு பெயர்களாக இருக்கும் பட்சத்தில், ஒரே சாதி பல்வேறு பெயர்களில் கணக்கிடப்படும் நிலை ஏற்படலாம் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதனால் அதிகாரப்பூர்வமாக உள்ள சாதிகளின் எண்ணிக்கையைவிட அதிகமான சாதிகள் இருப்பதாக தரவுகளில் பதிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இது சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி, அவற்றை எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் முறை
இந்த பிரச்னைக்கு எளிதான தீர்வு இருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள சாதிகள் குறித்த பட்டியல் மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருப்பதாகவும், தேசிய அளவில் மத்திய அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதால், அந்த அதிகாரப்பூர்வ பட்டியலை கணக்கெடுப்பு செயலியின் மென்பொருளில் இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன் மூலம், கணக்கெடுப்பில் பங்கேற்கும் மக்கள் தங்களது சாதியை அந்தப் பட்டியலில் இருந்து தேர்வு செய்யும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
