பிரதமர் இல்லம் அருகே காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது என சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி விமர்சித்துள்ளார்.
‘நீட்’ வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக அறிவித்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பார்லிமென்டை நோக்கி பேரணியாக சென்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் போலீசார் மற்றும் சில போராட்டக்காரர்கள் காயமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகக் கூறி காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கீதாஞ்சலி, பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக ஜந்தர் மந்தரில் மாணவர்களுடன் இணைந்து போராடியிருக்க வேண்டும் என்றார். மேலும், சில அரசியல் தலைவர்கள் சோனம் வாங்சுக்கின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
“பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழிப்புணர்வு பெற்ற இந்தியா. நேர்மையற்ற அரசியல் அணுகுமுறையை இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள்,” என்றும் அவர் கூறினார்.
மேலும், தங்களுக்கு அரசு அல்லது எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லை என்றும், கல்வி தொடர்பான பிரச்சினைகளை பார்லிமென்ட் முன்னுரிமையுடன் விவாதித்து தீர்வு காண வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் தெரிவித்தார். இந்த இயக்கம் நேர்மை மற்றும் தூய்மையான நோக்கத்துடன் உருவானது; எந்த அரசியல் தலைவருடனும் தொடர்பில்லை என்றும் கீதாஞ்சலி வலியுறுத்தினார்.
