அமராவதி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி கண்டூலா ஜெஸ்ஸி, உலகின் முதல் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிலவு செயற்கைக்கோள் திட்டமான மிஷன் சக்திசாட் (Mission ShakthiSAT)-இல் தேர்வு செய்யப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.
சென்னையை மையமாகக் கொண்ட விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முன்னெடுக்கும் இந்தத் திட்டத்தில், 108 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,000 சிறுமிகள் பங்கேற்றனர். அவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 20 திறமையான மாணவிகளில் 14 வயதான கண்டூலா ஜெஸ்ஸியும் ஒருவர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம், தவளேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெஸ்ஸியின் தந்தை தச்சராக பணியாற்றி வருகிறார். அரசுப் பள்ளியில் கல்வி கற்று வரும் ஜெஸ்ஸி, செயற்கைக்கோள் அமைப்புகள், உந்துவிசை (Propulsion), வெப்ப இயக்கவியல் (Thermodynamics) உள்ளிட்ட விண்வெளி அறிவியல் தொடர்பான 550-க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
மாணவிகள் வடிவமைக்கும் இந்த நிலவு செயற்கைக்கோள் அக்டோபர் 11-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தற்போது டில்லியில் நடைபெறும் சிறப்பு பயிற்சியில் ஜெஸ்ஸி பங்கேற்று வருகிறார். செயற்கைக்கோளை வடிவமைத்தல், உருவாக்குதல், ஏவுதல் மற்றும் அதன் செயல்பாட்டை கண்காணித்தல் உள்ளிட்ட அனைத்து கட்டங்களிலும் அவர் பங்களிக்க உள்ளார்.
இந்த சாதனை குறித்து பேசிய ஜெஸ்ஸி, சர்வதேச விஞ்ஞானிகளுடன் பேசும்போது ஆரம்பத்தில் பதற்றமாக இருந்ததாகவும், அரசுப் பள்ளி மாணவியாக தன்னை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார். தொடர்ந்து கடினமாக உழைத்தால் இஸ்ரோவில் சேரும் தனது கனவை நனவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கு பெருமை சேர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
