புதுடில்லி: மகாத்மா காந்தி எழுதிய அரிய கையெழுத்து பிரதிகள் மற்றும் கடிதங்களின் தொகுப்பு ரூ.16.20 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இந்திய வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணம் ஒன்று இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற ஆனந்த் டி. ஹிங்கோரனி, மகாத்மா காந்தியின் நெருங்கிய சீடராகவும் இருந்தார். ஹிங்கோரனியின் மனைவி வித்யா உயிரிழந்த பின்னர், அவருக்கு ஆறுதல் மற்றும் வழிகாட்டுதல் அளிக்கும் வகையில் மகாத்மா காந்தி தொடர்ந்து கடிதங்களை எழுதியதாக கூறப்படுகிறது.
சுமார் 23 மாதங்கள் நீடித்த இந்த கடிதப் பரிமாற்றத்தில், உண்மை, அஹிம்சை, சேவை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து மகாத்மா காந்தி 688 கடிதங்களை எழுதியுள்ளார்.
இந்த அரிய கடிதங்கள் பின்னர் ‘A Thought for the Day’ என்ற தலைப்பில் புத்தகமாக தொகுக்கப்பட்டன. இந்த தொகுப்பு இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியமான காலகட்டங்களை பதிவு செய்வதுடன், மகாத்மா காந்திக்கும் ஆனந்த் டி. ஹிங்கோரனிக்கும் இடையிலான நட்பு, வழிகாட்டுதல் மற்றும் தனிப்பட்ட உரையாடல்களையும் வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், மும்பையில் உள்ள சப்ரோன்ஆர்ட் ஏல மையத்தில் நடைபெற்ற ஏலத்தில் மகாத்மா காந்தியின் கையெழுத்து பிரதிகள் ரூ.16.20 கோடிக்கு ஏலம் விடப்பட்டன.
‘Gandhi: From the Collection of Anand T. Hingorani’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஏலத்தில், மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள், கையெழுத்து பிரதிகள், புகைப்படங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய தனிப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட அரிய ஆவணங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த ஏலம், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புடைய ஆவணங்களுக்கு சர்வதேச அளவில் தொடர்ந்து நிலவும் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
