தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரம் குறித்து முதல்வர் விஜய் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், வேளாண் பட்ஜெட்டில் புதிய திட்டங்களை விட முதல்வரை புகழ்ந்து பேசுவதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார்.
கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகக் கூறிய அவர், வேளாண் பட்ஜெட்டில் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்த முக்கிய அறிவிப்பும் இடம்பெறவில்லை என்றார்.
தேர்தல் பிரசாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் உதயநிதி குற்றம்சாட்டினார்.
மேலும், மேகேதாட்டு அணை மற்றும் காவிரி நீர் பகிர்வு விவகாரம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விவசாயிகளின் உரிமைக்காகவும், பயிர்க்கடன் தள்ளுபடி, குறுவை சாகுபடி, காவிரி நீர் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இறுதியாக, “காவிரி விவகாரம் குறித்து பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருகிறோம். அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்விகள் எழுப்புவோம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் பதில் சொல்லட்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
