திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அது புரளி என்பது உறுதியான நிலையில், மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று (ஆகஸ்ட் 6) காலை திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், பழநி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
மோப்ப நாய்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பழநி மலைக்கோயில், தேவஸ்தான அலுவலகம், 2.4 கிலோமீட்டர் கிரிவலப் பாதை, முடி காணிக்கை செலுத்தும் மையம், இலவச கழிப்பறைகள், குளியலறைகள் மற்றும் பக்தர்கள் காத்திருக்கும் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் முடிவில் எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படாததால், மிரட்டல் வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த போலீசார், அந்த அழைப்பு திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்தது என்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தருமபுரியைச் சேர்ந்த முனியப்பன் (24) என்பவர் இந்த மிரட்டலை விடுத்தது தெரியவந்தது.
போலீசாரின் விசாரணையில், பழநி முருகன் கோயிலில் சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, முனியப்பனை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
