புதுடெல்லி: தனது தாய் மறைந்த பின்னரும், அவர் இல்லாத வெற்றிடத்தை இப்போதும் ஆழமாக உணர்வதாக பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதிய ‘இந்தியக் குடியரசின் வெற்றி: என் வாழ்க்கை, என் போராட்டங்கள்’ என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. விழாவில் புத்தகத்தை வெளியிட்டு பிரதமர் மோடி பேசினார்.
ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையை வெளியிடுவதில் பெருமை கொள்வதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்த நூல் இந்திய ஜனநாயகத்தின் பாரம்பரிய அடையாளமாக மாறும் என்றும், வரும் தலைமுறையினர் அதிலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
இளைஞர்களுக்கு அறிவுரை
இன்றைய ‘ரீல்ஸ்’ காலத்தில் சமூக ஊடக பிரபலங்கள் இளைஞர்களை வேறு திசைக்கு அழைத்துச் செல்லக்கூடும் என்று பிரதமர் மோடி எச்சரித்தார்.
வாழ்க்கையில் குறுக்கு வழியைத் தேடுவதைவிட, தங்களுக்கு பிடித்தவர்களின் சுயசரிதைகளை இளைஞர்கள் படிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் மற்றவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், குறுக்கு வழிகள் வாழ்க்கைப் பயணத்தை பாதிக்கக்கூடும் என்பதால், கடின உழைப்பு மற்றும் மன உறுதியுடன் முன்னேற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
“தாய் இல்லாத வெற்றிடத்தை உணர்கிறேன்”
ராம்நாத் கோவிந்தின் சுயசரிதையில் அவரது தாயார் குறித்தும், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்தது குறித்தும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ராம்நாத் கோவிந்த் அனுபவித்த அந்த வலியை தன்னால் உணர முடியும் என்று கூறிய பிரதமர், தனது தாய் 100 ஆண்டுகள் வரை வாழ்ந்து தன்னை ஆசீர்வதித்துச் சென்றது தனது அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், தனது தாய் மறைந்த பின்னரும் அவர் இல்லாத வெற்றிடத்தை இப்போதும் ஆழமாக உணர்வதாக பிரதமர் மோடி உருக்கமாக கூறினார்.
ராம்நாத் கோவிந்தின் பங்களிப்பு
குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ராம்நாத் கோவிந்த் பொது வாழ்க்கையில் தொடர்ந்து பங்களித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய ஜனநாயகத்தில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் நோக்கில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான பணிகளில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு மன உறுதியுடன் நாட்டின் உயரிய அரசியலமைப்புப் பதவிக்கு ஒருவர் எவ்வாறு உயர முடியும் என்பதற்கு ராம்நாத் கோவிந்தின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு என்றும் பிரதமர் தெரிவித்தார்.
