அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை (பெட்னா) சார்பில் நடைபெற்ற தமிழ் விழாவில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை மதம் அல்லது சாதி அடையாளங்களுக்குள் அடைத்து பார்க்கக் கூடாது என்றும், தமிழர் என்ற அடையாளமே அனைவரையும் ஒன்றிணைக்கும் பெரிய வட்டமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், புறநானூற்றின் 182-வது பாடல் தமிழர்களின் உயரிய பண்புகளையும் மனிதநேயத்தையும் எடுத்துரைப்பதாக குறிப்பிட்ட அவர், குழந்தைகள் அந்தப் பாடலைப் படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அமிர்தம் கிடைத்தாலும் பகிர்ந்து உண்ணுதல், அஞ்சாமல் உழைத்தல், பிறர் நலனுக்காக வாழ்தல் போன்ற பண்புகளை தமிழர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கல்வியே மனிதனை உயர்த்தும் மிகப்பெரிய சக்தி என்றும், அறிவு, கண்ணியம், ஒழுக்கம் கொண்டவர்களே சமுதாயத்தில் உயர்ந்த இடம் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பாலமாக பெட்னா அமைப்பு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
