நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அணி, உலகக் கோப்பை ‘ரவுண்ட்-32’ நாக்-அவுட் போட்டியில் கேப் வெர்டே அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களுக்கு கடைசி நிமிடம் வரை பரபரப்பை ஏற்படுத்தியது.
போட்டி தொடங்குவதற்கு முன் அர்ஜென்டினாவுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற கேப் வெர்டே அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அர்ஜென்டினாவுக்கு கடும் சவால் கொடுத்தது.
29வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதன்மூலம் இந்த தொடரில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது. முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் 59வது நிமிடத்தில் டிரோய் டுவர்ட்டி கோல் அடித்து கேப் வெர்டேவை சமநிலைக்கு கொண்டு வந்தார். நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமமாக இருந்ததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கூடுதல் நேரத்தின் 92வது நிமிடத்தில் லிசார்ன்டோ மெட்டினிசி கோல் அடித்து அர்ஜென்டினாவை மீண்டும் முன்னிலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் 103வது நிமிடத்தில் சிட்னி லோப்ஸ் கேப்ரல் கோல் அடித்து கேப் வெர்டே மீண்டும் 2-2 என சமநிலையை ஏற்படுத்தியது.
போட்டியின் 111வது நிமிடத்தில் கேப் வெர்டே வீரர் டினி செய்த துரதிர்ஷ்டவசமான சுயகோல் அர்ஜென்டினாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா, அடுத்த சுற்றான ‘ரவுண்ட்-16’ போட்டியில் எகிப்தை சந்திக்கிறது.
