தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சென்னை: இடதுசாரி கட்சிகள் மற்றும் கரப்பான் பூச்சி அமைப்பினர் நடத்தும் போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதை தடுக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரத்தில் தலைமைச் செயலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வலியுறுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வட்டாட்சியர் விவகாரத்திலும் குற்றச்சாட்டு
குஜிலியம்பாறை வட்டாட்சியர் தொடர்பான விவகாரத்தில் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்திருந்த நிலையில், பயிற்சி முடிந்ததால் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தில் பணியில் சேர்வதற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் விடுவிக்கப்பட்டதாக ஆட்சியரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சண்முகம் கூறியுள்ளார்.
அடுத்தடுத்து இடதுசாரிகள் குறிவைக்கப்படுவது தற்செயலானது அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இதை வலியுறுத்தி இன்று ஆகஸ்ட் 22-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
