பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் நில மோசடி வழக்கில் முக்கிய நடவடிக்கையாக, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து நில ஆவணங்களையும் ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட சிறப்பு குழுவை பத்திரப்பதிவு துறை அமைத்துள்ளது.
பழநி அடிவாரம் பூங்கா ரோட்டில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி தனிநபர்களுக்கு ரூ.2 கோடிக்கு முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக கோவில் நிலங்கள் கண்காணிப்பாளர் முருகானந்தம், ஜூலை 15-ஆம் தேதி சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி உட்பட நால்வரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஜஸ்டின் மணிகண்டன் சார் பதிவாளராக பொறுப்பேற்ற நாள் முதல் அவர் பதிவு செய்த அனைத்து நில ஆவணங்களையும் சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்த பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 6 பேர் கொண்ட சிறப்பு குழு, ஆய்வை மேற்கொண்டு மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
