நீதிமன்ற நடவடிக்கைகளை முன் அனுமதியின்றி ஆடியோ அல்லது வீடியோ வடிவில் பதிவு செய்து, சமூக ஊடகங்கள் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பகிர்வது, பதிவேற்றம் செய்வது மற்றும் அதன்மூலம் வருமானம் ஈட்டுவது ஆகியவற்றுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளின் சில பகுதிகளை மட்டும் சூழ்நிலையிலிருந்து பிரித்து சமூக ஊடகங்களில் பரப்புவது, நீதித்துறையின் கண்ணியத்தையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதிக்கிறது எனக் கூறி பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனு விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், அண்மையில் நீதிமன்றத்தில் நடந்த சம்பவங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, நீதிமன்ற நடைமுறைகள் கேலிக்கூத்தாக மாறியுள்ளதாக வாதிட்டார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களின் பேச்சுகளை மாற்றியமைத்து தவறான தகவல்களை பரப்பும் அபாயம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, ஐகோர்ட் பதிவாளர்கள் அல்லது சுப்ரீம் கோர்ட் செயலாளர் ஜெனரலின் முன் அனுமதி இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆடியோ அல்லது வீடியோ வடிவில் பிரித்தெடுத்தல், மாற்றம் செய்தல், பதிவிடுதல், மறுபதிவிடுதல் அல்லது பதிவேற்றம் செய்தல் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
அதேசமயம், இந்த உத்தரவு நீதிமன்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடையாக இருக்காது என்றும், கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கமுடையதல்ல என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் நீதிமன்ற வீடியோக்கள் பகிரப்படுவது தொடர்பாக மெட்டா, எக்ஸ் உள்ளிட்ட தளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி, நீதிமன்ற நேரலை ஒளிபரப்புகளும் உரிய அனுமதியுடன் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும், நீதிமன்றம் 24 மணி நேர பொழுதுபோக்கு சேனலாக செயல்பட முடியாது என்றும் குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், தாம் கூறாத கருத்துகளும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அனுபவம் இருப்பதாகவும், அண்மையில் ஒரு வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்படாத மனுவையே வழக்காக சித்தரித்து தவறான செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
