கன்னியாகுமரி மாவட்டத்தில் 1982-ஆம் ஆண்டு நடைபெற்ற மண்டைக்காடு கலவரத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள “மண்டைக்காட்டின் மறுபக்கத்தின் மறுபக்கம்” என்ற புத்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளது.
இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் வி.எஸ். ஆறுமுகம் அளித்துள்ள மனுவில், மண்டைக்காடு கலவரம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் கடந்த காலங்களில் வெளியான நிலையில், தற்போது சில கிறிஸ்தவ அமைப்புகள் இந்த புதிய புத்தகத்தை வெளியிட்டு, அதன் வெளியீட்டு விழாவை ஜூலை 26-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சில தகவல்கள் உண்மைக்கு புறம்பாகவும், ஒரு தரப்பினரை மட்டும் குற்றவாளிகளாக சித்தரிக்கும் வகையிலும் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால் சமூகங்களுக்கிடையே பதற்றம் ஏற்பட்டு, மத உணர்வுகள் பாதிக்கப்படக்கூடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த புத்தகத்தின் விற்பனை மற்றும் விநியோகம் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கும் அபாயம் இருப்பதாகக் கூறியுள்ள இந்து முன்னணி, புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்கவும், வெளியீடு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டவர்கள்மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல்துறையிடம் கோரியுள்ளது.
மேலும், மாவட்டத்தில் அமைதியை பேண தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 196(1), 299, 302 மற்றும் 353(2) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
