குழந்தைகளை இலக்காக வைத்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக ஆய்வு செய்து, தேவையெனில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எல். வாசுகி தாக்கல் செய்த மனுவில், சட்டசபைத் தேர்தலின் போது அரசியல் கட்சிகள், பெற்றோர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி குழந்தைகள் மூலம் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறி, இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தாக்கல் செய்த பதில் மனுவில், 2024ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, குழந்தைகளை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர்கள் அனைவரும் வயது வந்தவர்கள் என்பதால், அவர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கும் உரிமை கொண்டவர்கள் என்றும், எந்தவொரு அழுத்தமும் கொடுப்பது தேர்தல் முறைகேடாகக் கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் மூலம் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வாக்கு முடிவில் செல்வாக்கு செலுத்தும் வகையிலான பிரசாரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, அவசியம் ஏற்பட்டால் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
