நவோதயா வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்குவது தொடர்பான வழக்கில், மாநில அரசுக்கு சுப்ரீம்கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் 12 வார கால அவகாசம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், 3 வாரங்களுக்குள் உரிய விளக்கத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மத்திய அரசின் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை நிறுவ மாநில அரசு நிலம் ஒதுக்கினால் போதுமானது. பள்ளிகளுக்கான கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் செலவுகளை மத்திய அரசே ஏற்கிறது. இருப்பினும், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவதற்கு மாநில அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகளை நிறுவ வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு ஜூலை 16 அன்று நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது, “நவோதயா பள்ளிகளை தமிழகம் மட்டும் ஏன் புறக்கணிக்கிறது?” என்று நீதிபதி பி.வி. நாகரத்னா கேள்வி எழுப்பினார். மேலும், 9-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, அது தேவையானால் 6-ஆம் வகுப்பிலிருந்தே கற்பிக்கலாம் என்றும், 9-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அடித்தளமாக இருப்பதால் அப்போது புதிய மொழி சேர்ப்பது மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்தார்.
இந்த வழக்கில் தமிழக அரசு 3 வாரங்களுக்குள் தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றும், அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது.
