தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய சமக்ர சிக்ஷா (Samagra Shiksha) திட்ட நிதியை விடுவிக்கக் கோரி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை சந்திப்பதற்காக, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் செயல்படும் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், புதிய பள்ளிகள் தொடங்குதல், ஆசிரியர்கள் நியமனம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு பி.எம்.ஸ்ரீ (PM SHRI) பள்ளிகள் திட்டத்தில் இணைவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தாலும், பின்னர் அந்த முடிவிலிருந்து பின்வாங்கியது. இதையடுத்து, பி.எம்.ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசு இதை ஏற்காததால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, தமிழகத்திற்கு சுமார் ரூ.5,000 கோடி வரை சமக்ர சிக்ஷா நிதி வழங்கப்பட வேண்டியுள்ளது.
இதுகுறித்து அண்மையில் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நிலுவையில் உள்ள நிதியை பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மத்திய கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க கோரிக்கை வைக்க அமைச்சர் ராஜ்மோகன் விரைவில் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
