பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் பெயரில் பதிவு செய்த விவகாரத்தில், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலத்தை விற்பனைப் பதிவு செய்ய சார்பதிவாளர் மறுத்ததை எதிர்த்து சிலர் தாக்கல் செய்த வழக்கில், முன்பு தனி நீதிபதி சார்பதிவாளரின் மறுப்பு உத்தரவை ரத்து செய்து, விற்பனைப் பதிவை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், கடந்த ஜூலை 6ஆம் தேதி இரு தனிநபர்களின் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, பத்திரப்பதிவை மேற்கொண்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை தமிழக அரசு பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்தது. மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கோவில் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் செயல் அலுவலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன், தனிநபர்கள் பெயரில் செய்யப்பட்ட பத்திரப்பதிவு செல்லாது என்றும் உத்தரவிட்டது.
