தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் மெட்ரோபொலிட்டன் வளர்ச்சி ஆணையத்தின் (HMDA) தலைமை பொறியாளர் ரவீந்திரன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரகசிய தகவலின் அடிப்படையில், ரவீந்திரனுக்கு சொந்தமான வீடுகள், உறவினர்கள் மற்றும் பினாமிகள் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அசையும் மற்றும் அசையா சொத்துகளுக்கான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆவணங்களில் சொத்துகளின் மதிப்பு ரூ.9.24 கோடியாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போதைய சந்தை மதிப்பில் அவை சுமார் ரூ.100 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனையில் 5 இடங்களில் பிளாட்கள், 4 அடுக்குமாடி குடியிருப்புகள், விவசாய நிலம், 3,000 சதுர அடி வில்லா, வணிக வளாகம் உள்ளிட்ட சொத்துகள் கண்டறியப்பட்டன. மேலும், ரூ.3.82 லட்சம் ரொக்கம், ரூ.45 லட்சம் வங்கி டெபாசிட், 1.44 கிலோ தங்க நகைகள், 12.5 கிலோ வெள்ளி பொருட்கள், வீட்டு உபயோக மற்றும் மின்னணு சாதனங்கள், ரூ.1.16 கோடி மதிப்பிலான 4 சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவீந்திரனுக்கு வேறு இடங்களிலும் சொத்துகள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
