கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 3,084.95 ஏக்கர் நிலங்களின் பத்திரப்பதிவு மீதான தடை நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க, தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில், புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், குப்புச்சிபாளையம் ரவீஸ்வரர் கோவில் மற்றும் வெஞ்சமாங்கூடலூர் விக்ருதீஸ்வரர் கோவில் ஆகிய நான்கு கோவில்களுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிலங்கள் 15 கிராமங்களில் பரவி உள்ளன. இந்த நிலங்களுக்கு 3,390 பேரின் பெயரில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டதாகவும், அவற்றின் பத்திரப்பதிவுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தடையை கரூர் மாவட்ட ஆட்சியர் ஜூலை 9ஆம் தேதி நீக்கியதை எதிர்த்து சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இந்த நிலங்களின் மதிப்பு சுமார் ரூ.25,000 கோடி என்றும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசின் முன் அனுமதியின்றி பதிவு செய்ய வழிவகுக்கும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பாளர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனவே தடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
