திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் தொடர்பான பத்திரப்பதிவு முறைகேடு புகாரில், பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலம், பழநி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான இலவச வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிலத்திற்கு தொடர்பில்லாத ஒரு அறக்கட்டளை மூலம், முருகதாஸ் என்பவர் பெயரில் இருந்து வெள்ளைதுரை மற்றும் சேதுபதி ஆகியோருக்கு கடந்த ஜூலை 6, 2026 அன்று கிரயப்பத்திரம் பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புகாரின் அடிப்படையில் பதிவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில், முறைகேட்டில் தொடர்புடையதாகக் கூறப்படும் பழநி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து பதிவுத்துறை ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
