காந்திநகர்: இந்திய போக்குவரத்துத் துறையின் எதிர்காலம் ஹைட்ரஜன் எரிபொருளை நோக்கியே நகரும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
காந்திநகரில் நடைபெற்ற ‘பிரவாஸ் 5.0’ மற்றும் ‘பாரத் பிரவாஸ் விருதுகள்’ வழங்கும் விழாவில் பேசிய அவர், ஹைட்ரஜன் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் 10 வழித்தடங்களில் முன்னோடி சோதனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மாற்று எரிபொருள் மற்றும் உயிரி எரிபொருள் தொழில்நுட்பங்களில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும், தொழில்நுட்ப திறன் மற்றும் குறைந்த செலவு காரணமாக உலகளவில் இந்தியா முக்கிய இடத்தைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் ஆட்டோமொபைல் துறையின் பங்கு முக்கியமானது என்றும், உலகத் தரத்திலான வசதிகளுடன், பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவைகளை வழங்க உற்பத்தியாளர்களும் போக்குவரத்து நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கட்கரி வலியுறுத்தினார். மேலும், நாட்டில் பஸ் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
சாலை பாதுகாப்பு குறித்து பேசிய அவர், இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும், அதில் சுமார் 1.80 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்தார். உயிரிழப்பவர்களில் 66 சதவீதம் பேர் 18 முதல் 36 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும், சாலை விபத்துகளால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 3 சதவீத இழப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
விபத்துகளை குறைக்க அரசு மட்டுமின்றி, பொதுமக்களும் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்தார்.
