மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்குவதற்கு தடை இல்லை. இருப்பினும், அந்த நியமனங்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று தமிழக வெற்றி கழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமுருகன் மற்றும் சீனி அகமது ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்படவில்லை என்றும், இந்த நியமனத்தில் அரசு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கரூரில் திட்டமிட்டபடி அரசு விழாவை நடத்தவும், பணி நியமன ஆணைகளை வழங்கவும் தடையில்லை என்று தெரிவித்தனர். எனினும், அந்த நியமனங்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், நியமனம் பெற்றவர்கள் முதல் மாத சம்பளம் பெறுவதற்கு முன்பாக ஜூலை 21-ஆம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணையில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை (TNPSC) எதிர்மனுதாரராக சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
