சென்னை: கரூரில் கடந்த 2025 செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் தற்காலிக அரசு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். மேலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியும் வழங்கப்பட்டது.
2025-ஆம் ஆண்டு கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதன்பின் 285 நாட்களுக்குப் பிறகு, முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் முதன்முறையாக கரூருக்கு நேரில் சென்றார்.
கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை அருகே உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் சாலைப் பேரணியிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
மேலும், மனவாசி ஊராட்சியில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, காவல்துறை, பதிவுத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் கருணை அடிப்படையில் தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு ரூ.10 லட்சம் கருணை நிதியை முதல்வர் விஜய் வழங்கினார்.
