சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் முதல்வர் விஜய் வெற்றி பெற்ற நிலையில், பின்னர் அவர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதனால் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இடைத்தேர்தலை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கவும், நடத்தவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கில் மத்திய அரசு, முதல்வர் விஜய் மற்றும் தமிழக சட்டசபை செயலர் ஆகியோர் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
