புதுடெல்லி: சுப்ரீம் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, மனுதாரர் ஒருவரின் செயலால் நீதிமன்ற வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
காலை 11 மணியளவில் நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் அராதே அமர்வு விசாரணையை தொடங்கினர். அப்போது பிரபால் பிரதாப் என்ற மனுதாரர் ஆஜராகி, தன்னை “தி சாவரின் (The Sovereign)” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பின்னர், நீதிபதிகளை “நீதித்துறை சேவகர்கள்” என்று குறிப்பிட்ட அவர், சைபர் குற்றங்கள் தொடர்பாக லக்னோ ஏஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள், “நீதிமன்றத்திற்கே நீங்கள் உத்தரவிடுகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மனுதாரர் தலைமை நீதிபதியை விமர்சித்ததுடன், தனது கையில் இருந்த ஆவணங்களை கிழித்து நீதிமன்றத்தில் வீசினார். இதனால் விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு பணியாளர்கள் அவரை நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அவர் விரக்தியில் இருப்பதாகவும், அவரது நிலை குறித்து இரக்கம் தெரிவிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
