சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலரும் வழக்கறிஞருமான கவிகணேசன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 22ஆம் தேதி முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சில பள்ளிகளில் அரசியல் கட்சியினர் கொடிகள் மற்றும் சின்னங்களுடன் நிகழ்ச்சிகளை நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிகழ்ச்சிகளில் மாணவர்களிடம் பிறந்தநாள் பாடல்கள் பாடச் செய்ததாகவும், கோஷங்கள் எழுப்பச் செய்ததாகவும், திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 3,000 மாணவர்களை முதல்வரின் முகவடிவில் அமர வைத்து நிகழ்ச்சி நடத்தியதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களை அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்துவது கல்வி நிறுவனங்களின் அடிப்படை நோக்கத்துக்கு முரணானது என்றும், கல்வி நிறுவனங்களில் அரசியல் அல்லது மத சித்தாந்தம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற அரசாணை ஏற்கனவே அமலில் இருப்பதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்த அரசாணையை கண்டிப்பாக அமல்படுத்தவும், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, பொறுப்புடைய கல்வி நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கும் விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வாதிட்டார்.
வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.
