மும்பை: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மஹாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ராய்காட் மாவட்டத்தில் உள்ள எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் ஆலையில் வெள்ளம் புகுந்து, சுமார் 3,000 எல்பிஜி சிலிண்டர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
பலத்த மழையால் ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் எல்பிஜி நிரப்பும் ஆலையை வெள்ளநீர் சூழ்ந்தது. இதில், நிரப்பப்பட்ட மற்றும் காலியான சிலிண்டர்கள் என ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் பாதாளகங்கா ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆற்றில் அடித்துவரப்படும் சிலிண்டர்களை பொதுமக்கள் எவரும் தொடவோ, மீட்க முயற்சிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆற்றிலோ அல்லது அதன் கரையோரங்களிலோ எல்பிஜி சிலிண்டர்கள் தென்பட்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், வட இந்தியாவிலும் கனமழை பாதிப்பு நீடித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சதர் பஜார், கிரேட்டர் கைலாஷ், பதர்பூர், நசீர்பூர், ஸ்வரூப் நகர், துவாரகா, விகாஸ் மார்க் உள்ளிட்ட பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், ரிங் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, டெல்லி–நொய்டா எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலை 48 உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
