இந்தோனேஷியாவில் இந்தியாவின் முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனமான பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM Bangalore) தனது புதிய வளாகத்தை அமைக்க உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக இந்தோனேஷியா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது செயற்கை நுண்ணறிவு (AI), தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, புதுமை தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, “இரு நாடுகளின் இளைஞர்களுக்கிடையே தொழில்நுட்ப மற்றும் கல்வி ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்டார்ட்அப் சூழலை வலுப்படுத்தும் முயற்சியாக, இந்தியாவின் முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனமான பெங்களூரு ஐஐஎம் தனது வளாகத்தை இந்தோனேஷியாவில் நிறுவ உள்ளது” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே ஆமதாபாத் ஐஐஎம் துபாயில் தனது சர்வதேச வளாகத்தை நிறுவியுள்ளது. அதன்பின் வெளிநாட்டில் வளாகம் அமைக்கும் இரண்டாவது இந்திய மேலாண்மை நிறுவனம் என்ற பெருமையை பெங்களூரு ஐஐஎம் பெறுகிறது.
மேலும், இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் உலகளாவிய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக சென்னை ஐஐடி தான்சானியாவிலும், டெல்லி ஐஐடி அபுதாபியிலும் தங்களது வளாகங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளன.
