தெலுங்கானா மாநிலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்ததாகக் கூறப்படும் டிஎஸ்பி சன்கிரெட்டி பீம் ரெட்டியை, ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள போலீஸ் கணினி சேவை பிரிவில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் சன்கிரெட்டி பீம் ரெட்டி, தனது அதிகாரப் பதவியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக சொத்துகளை சேர்த்ததாக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகம், பினாமி பெயரில் உள்ள இடங்கள் உள்ளிட்ட தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் மொத்தம் 15 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஐதராபாத்தின் இப்ராஹிம்பாக் பகுதியில் சொகுசு குடியிருப்பு, டெலிகாம் நகரில் வீடு மற்றும் பிளாட், கச்சிபவுலியில் அடுக்குமாடி குடியிருப்பு, மணிகொண்டாவில் சுமார் 3,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வணிக வளாகம், தேலாப்பூரில் இரண்டு குடியிருப்புகள், பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள், முதலீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.300 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது வீட்டில் இருந்து ரூ.3.60 லட்சம் ரொக்கப் பணமும், பினாமி வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் பல்வேறு சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து டிஎஸ்பி சன்கிரெட்டி பீம் ரெட்டியை கைது செய்த ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
