குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் செமிகண்டக்டர் ஆலையை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடிய அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, அவர்களின் திறன் மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.
இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற முதல் கட்ட முக்கிய திட்டங்களில் ஒன்றான இந்த ஆலை, ரூ.7,500 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆலையை பார்வையிட்ட பிரதமர், அங்குள்ள பணியாளர்களுடன் நேரடியாக உரையாடினார்.
அதைத் தொடர்ந்து வெளியிட்ட பதிவில், “சனந்த் செமிகண்டக்டர் ஆலையின் திறப்பு விழாவில் மிகவும் மகிழ்ச்சியளித்த தருணங்களில் ஒன்று, அங்கு பணிபுரியும் ஊழியர்களை சந்தித்தது. குறிப்பாக, அந்த ஆலையில் பெரும்பாலான பணியாளர்கள் பெண்களாக இருப்பது பெருமைக்குரிய விஷயம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “அவர்கள் இந்தியாவின் பல்வேறு தொலைதூர பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் பழங்குடியினப் பின்னணியைச் சேர்ந்தவர்கள். இருப்பினும், அவர்களின் மன உறுதியும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் திறன் பெற வழிவகுத்துள்ளது. பயிற்சி பெற்று இன்று இந்தியாவின் செமிகண்டக்டர் வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். பெண் சக்தியைக் கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்நாட்டு செமிகண்டக்டர் உற்பத்தியை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆலை செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
