மேகதாது அணைத் திட்டம் தென் மாநிலங்களின் நலனுக்கான முக்கிய திட்டம் என்றும், இதுகுறித்து தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேகதாது அணைத் திட்டம் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களின் நலனையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்தத் திட்டத்தால் கர்நாடகாவை விட தமிழகத்திற்கே அதிக நன்மை கிடைக்கும் என்றும், தமிழகத்திற்கான 177 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேகதாது அணைத் திட்டத்திற்கு இறுதி முடிவை மத்திய நீர்வள ஆணையமே எடுக்க வேண்டும் என்றும், இந்த அணையில் சேமிக்கப்படும் நீர் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்; பாசனத்திற்காக ஒரு சொட்டு நீரும் பயன்படுத்தப்படாது என்றும் அவர் விளக்கமளித்தார்.
மேலும், பெங்களூருவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி ஆற்றைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். மேகதாது அணை மூலம் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
காவிரி விவகாரம் பல ஆண்டுகளாக அரசியல் நோக்கில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட சிவகுமார், இரு மாநில மக்களின் நலனே முக்கியம் என்றும், இந்த விவகாரத்தில் அரசியலுக்கு இடமில்லை என்றும் வலியுறுத்தினார். தமிழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு மாநிலங்களுக்கும் ஏற்ற தீர்வை காண கர்நாடக அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
