மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சிக்கு தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுத்து வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தீர்மானத்தில், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட எந்தவித அனுமதியையும் மத்திய அரசு வழங்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி நீர்ப்படுகை ஏற்கனவே பற்றாக்குறை படுகையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், புதிய நீர்த்தேக்கத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு பிற படுகை மாநிலங்களின் ஒப்புதலும், மத்திய அரசின் அனுமதியும் இன்றி புதிய அணை அல்லது நீர்த்தேக்கத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும், கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ அல்லது அதற்கு அனுமதி வழங்கவோ கூடாது என மத்திய அரசை சட்டசபை வலியுறுத்தியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாமக எம்எல்ஏ சவுமியா, விசிக எம்எல்ஏ வன்னி அரசு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். தமிழக விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மேகதாது அணை விவகாரத்தில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
