டாக்கா: ஸ்ரீராமர் படத்தை அவமதித்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேச தலைநகர் டாக்காவில் மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், கைபந்தா பகுதியில் நடைபெற்று வந்த 81 அடி உயர ஸ்ரீராமர் சிலை கட்டுமானப் பணிகள் மிரட்டல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம் பலாஷ்பாரி உபஜிலாவில் நாட்டின் மிகப்பெரிய ஸ்ரீராமர் சிலையை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், சில குழுக்கள் மிரட்டல் விடுத்ததால் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராதா-கோவிந்தா கோவில் கமிட்டியின் நிறுவனரும் தலைவருமான ஹரிதாஸ் சந்திர தாஸ் கூறுகையில், 81 அடி உயரமுள்ள ஸ்ரீராமர் சிலையின் கட்டுமானப் பணிகளில் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், சில தீவிரவாத குழுக்களின் மிரட்டல் காரணமாக பணிகளை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பணிகளை பாதுகாப்புடன் தொடர வங்கதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், கைபந்தாவில் உள்ள ராதா-கோவிந்தா கோவிலை இடிக்கவும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. இதனால், ஸ்ரீராமர் சிலை கட்டுமானத்திற்கு எதிராக மிரட்டல் விடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஹிந்து சமூகத்தினர் மற்றும் சிறுபான்மையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீராமர் படம் அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். மேலும், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீராமர் சிலை கட்டுமானப் பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் பேசிய ஜெகன்னாத் ஹால் மாணவர் சங்கத்தின் சமூக நலச் செயலாளர் ராம் பிரசாத் சஹா தோபு, “ஸ்ரீராமர் குறித்து வதந்திகள் பரப்பப்பட்டதுடன், அவரது படமும் அவமதிக்கப்பட்டது. இதுபோன்ற செயல்கள் ஹிந்து சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளன” என்று தெரிவித்தார்.
