பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க்) அமைப்பின் வருமான ஆதாரம், நன்கொடைகள் மற்றும் சட்டபூர்வ செயல்பாடுகள் குறித்து விளக்கம் கோரி, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் பிரியங்க் கார்கே அனுப்பியுள்ள கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 100 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், அமைப்பின் சட்டபூர்வ பதிவு, பொது செயல்பாடுகளுக்கான அனுமதி, அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் விவரங்கள் ஆகியவற்றை தெளிவுபடுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், அமைப்புக்கு கிடைக்கும் நன்கொடைகள், வருமான ஆதாரங்கள், செலவின விவரங்கள், சொத்து விபரங்கள் மற்றும் சட்டப்படி வரிகள் முறையாக செலுத்தப்படுகின்றனவா என்பதற்கான ஆதாரங்களையும் வழங்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இதற்கு ஆர்.எஸ்.எஸ். தரப்பில் என்ன பதில் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
