சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளி வளாகங்களில் மதம், அரசியல் மற்றும் கல்வி சாராத நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் தொடர்பான சட்ட விதிகளில் கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு திருத்தம் மேற்கொண்டது. அதன்படி, பள்ளி வளாகங்களை அரசியல், கருத்தியல், மதம், வகுப்புவாதம், பிரிவினைவாதம் மற்றும் கல்வி நோக்கமற்ற கூட்டங்கள், நிகழ்ச்சிகள், பிரசாரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த உத்தரவை பின்பற்றுவதாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து வேலூரைச் சேர்ந்த சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தேனியைச் சேர்ந்த ஸ்ரீ காமராஜ் வித்யாலயா தொடக்கப்பள்ளி ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பள்ளிகளில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. ஆனால், அந்த உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தனியார் பள்ளிகள் கட்டாயம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு மட்டும் இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கினர். மேலும், உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற பிரிவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையையும் அதுவரை நீட்டித்து உத்தரவிட்டனர்.
