புதுடெல்லி: அயோத்தி ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக, மத்திய புலனாய்வு அமைப்பான (CBI) சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவில் 2024-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவில் நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் கணக்குகளை கவனித்த மஹிபால் சிங், பக்தர்கள் வழங்கிய நன்கொடைகளில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மாநில அரசு மவுனம் காப்பதாக குற்றம்சாட்டிய நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் அனுப் பிரகாஷ் அவஸ்தி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ராமர் கோவிலுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளின் வரவு-செலவு கணக்குகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், பல கோடி ரூபாய் அளவுக்கு நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவதுடன், கோவில் நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தின் கீழ் நிரந்தர கண்காணிப்பு அமைப்பை உருவாக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
