கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது குண்டர் சட்டம்; முன்னாள் கமிஷனர் அருண் ஆஜராக உத்தரவு
சென்னை: கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையில், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அடுத்த வாரம் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் ராமதாஸ் நகரில், தேமுதிக பொதுச்செயலாளர் Premalatha Vijayakant-வின் சகோதரர் எல்.கே. சுதீஷின் மனைவி பூர்ணஜோதிக்கு சொந்தமான 2.10 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் சந்தோஷ் சர்மா, 234 குடியிருப்புகள் கட்டி அதில் 78 குடியிருப்புகளை சுதீஷ் மற்றும் பூர்ணஜோதிக்கு ஒதுக்க ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 குடியிருப்புகளில் சிலவற்றை போலி கையெழுத்து மூலம் ரூ.43 கோடிக்கு விற்பனை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சந்தோஷ் சர்மா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
அதனைத் தொடர்ந்து, குடியிருப்புகளை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாக 2025ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, சந்தோஷ் சர்மாவின் மகள் வர்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “2019 மற்றும் 2023 சம்பவங்கள் தொடர்பாக 2025ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகள் தாமதமாக குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த பிறகும் அதே குற்றச்சாட்டில் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தது சட்டவிரோதம்” என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தனது மகள் வர்ஷா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரை கவனித்துக்கொள்ள சந்தோஷ் சர்மாவுக்கு நான்கு வார இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என அவரது மனைவி கல்பனா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த அதிகாரி யார்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “இந்த கொடூரமான உத்தரவு நீதிமன்றத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றும் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து, குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்த முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அடுத்த வாரம் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
