தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர்ந்தது; 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை இடம் வழங்கப்பட்ட நிலையில், மொத்தம் 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தலைமையில் அரசு அமைக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த மே 10ஆம் தேதி முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் அமைச்சரவை விரிவாக்க விழா நடைபெற்றது.
தமிழக கவர்னர் C. P. Radhakrishnan-வை முதல்வர் விஜய் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். பின்னர் 23 பேருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 59 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ராஜேஷ்குமார் மற்றும் விஸ்வநாதன் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மேலும், கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத்குமார் மற்றும் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ் ஆகியோரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
பெண்கள் பிரதிநிதித்துவமாக விஜயலட்சுமி, கமலி, ஜெகதீஸ்வரி மற்றும் கீர்த்தனா ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சராக பதவியேற்ற பிறகு, கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார், “பெருந்தலைவர் காமராஜர் நாமம் வாழ்க, ராஜிவ் காந்தி நாமம் வாழ்க, ராகுல் காந்தி நாமம் வாழ்க” என கோஷம் எழுப்பியது கவனம் ஈர்த்தது.
புதிய அமைச்சர்கள் பட்டியல்:
- ஸ்ரீநாத் – தூத்துக்குடி
- கமலி – அவிநாசி
- விஜயலட்சுமி – குமாரபாளையம்
- ரஞ்சித்குமார் – காஞ்சிபுரம்
- வினோத் – கும்பகோணம்
- ராஜிவ் – திருவாடானை
- ராஜ்குமார் – கடலூர்
- காந்திராஜ் – அரக்கோணம்
- மதன் ராஜா – ஒட்டப்பிடாரம்
- ஜெகதீஸ்வரி – ராஜபாளையம்
- ராஜேஷ்குமார் – கிள்ளியூர்
- விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு
- லோகேஷ் தமிழ்ச்செல்வன் – ராசிபுரம்
- விஜய் தமிழன் பார்த்திபன் – சேலம் தெற்கு
- ரமேஷ் – ஸ்ரீரங்கம்
- விஸ்வநாதன் – மேலூர்
- குமார் – வேளச்சேரி
- தென்னரசு – ஸ்ரீபெரும்புதூர்
- சம்பத்குமார் – கோவை வடக்கு
- முகமது பர்வேஸ் – அறந்தாங்கி
- சரத்குமார் – தாம்பரம்
- மரிய வில்சன் – ஆர்.கே.நகர்
- விக்னேஷ் – கிணத்துக்கடவு
மாவட்ட வாரியாக அமைச்சர்கள் எண்ணிக்கை:
- சென்னை – 7
- நாமக்கல் – 3
- கோவை – 2
- காஞ்சிபுரம் – 2
- மதுரை – 2
- ஈரோடு – 2
- விருதுநகர் – 2
- தூத்துக்குடி – 2
- ராமநாதபுரம் – 1
- திருப்பூர் – 1
- செங்கல்பட்டு – 1
- ராணிப்பேட்டை – 1
- சிவகங்கை – 1
- கன்னியாகுமரி – 1
- திருச்சி – 1
- கடலூர் – 1
- தஞ்சாவூர் – 1
- புதுக்கோட்டை – 1
- சேலம் – 1
இதற்கிடையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
