நாகர்கோவில்,
தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு உண்டு என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு மொழிக்கும் பின்னால் தனித்த வரலாறு உள்ளது. ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்ற கொள்கையின் மூலம் நாட்டை கட்டுப்படுத்த பாஜ முயற்சிக்கிறது.
மாநிலங்களை அந்தந்த மாநில மக்களே ஆள வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. டில்லியில் இருந்து தமிழகத்தை கட்டுப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. மொழி, பண்பாடு, வரலாறு, உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
அரசியலமைப்பு கூறும் மாநில உரிமைகளை பாஜ ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு எதிராக அரசியல் போராட்டம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலையை எடுத்துக்காட்டாக கூறி, அமைதி பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.
தமிழகத்தை தமிழர்களே ஆள வேண்டும் என்றும், தற்போதைய அதிமுக தனது அடையாளத்தை இழந்துள்ளதாகவும், பாஜவுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
அதேசமயம், தமிழக வளர்ச்சியில் அதிமுகவுக்கு முக்கிய பங்கு இருந்தது என்றும், அந்தக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மாநிலத்தின் முன்னேற்றத்தில் பங்களித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் ஊழல் காரணமாக பாஜ கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து திமுக–காங்கிரஸ் கூட்டணி செயல்பட்டதாகவும், மாநில பிரதிநிதித்துவத்தை பாதுகாப்போம் என்றும் தெரிவித்தார்.
தமிழகம் இந்தியாவிற்கு வளர்ச்சி பாதையை காட்டிய மாநிலம் என்றும், கல்வி மற்றும் சமூக நலத் திட்டங்களில் முன்னோடியாக இருப்பதாகவும் கூறினார்.
திமுக அரசு செயல்படுத்தும் காலை உணவு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் தொடரும் என்றும், தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க உறுதி எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
