காரைக்குடி,
காரைக்குடியில் உள்ள எம்.பி. கார்த்தி அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ரூ.13 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அதிகாரி தர்மலிங்கம் தலைமையிலான குழு எம்.பி. அலுவலகத்தில் சோதனை நடத்தியது. அப்போது அங்கு ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை செய்து கொண்டிருந்தபோது, அங்கு இருந்த நிர்வாகிகள் இருவர் பணப்பையை பறித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களை பிடிக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டபோது, அங்கு இருந்த சிலர் பறக்கும் படை வாகனத்தின் சாவியை பிடுங்கி தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏஎஸ்பி ஆசிஸ் புனியா மற்றும் தாசில்தார் ராஜா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாவியை பிடுங்கியதாக கூறப்படும் பழனியப்பன் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, பணத்துடன் தப்பிச் சென்றவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
