மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த, தேவையானால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவைப் பயன்படுத்தலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
சென்னை சேர்ந்த அலர்மேல் வள்ளி தாக்கல் செய்த மனுவில், கொடைக்கானல் மாப்பிள்ளை முதலிச் சாலையில் செயின்ட் அந்தோணி சர்ச் நிர்வாகம் மற்றும் செல்வம் தரப்பு ஆக்கிரமிப்பு செய்து, அங்கீகாரமற்ற கட்டிடங்கள் அமைத்துள்ளதாக கூறப்பட்டது. அவற்றை அகற்றி, அந்த இடத்தில் பூங்கா அமைக்க உத்தரவிட கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 2024 ஜூன் 19ஆம் தேதி சர்ச் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, விசாரணைக்கு பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், மூன்று மாதங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படாததால், நகராட்சி கமிஷனர், தாசில்தார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஆர். பூர்ணிமா அமர்வு விசாரித்தது. விசாரணையின் போது, சம்பவம் தொடர்பான காணொளி பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், ஒருவர் மாவட்ட நிர்வாகத்தையும் நீதிமன்றத்தையும் மிரட்டியபோதும், அதிகாரிகள் மவுனமாக இருந்தது நீதிபதிகள் கவனத்திற்கு வந்தது.
அந்த நபரை உடனடியாக கைது செய்திருக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய தவறியுள்ளனர் என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், திண்டுக்கல் கலெக்டர் சரவணன் மற்றும் எஸ்.பி. பிரதீப் தேவையான போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், தடையினை ஏற்படுத்துவோரைக் கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் தேர்தல் நடத்தை விதிகள் தடையாக இருக்க முடியாது என்றும், அவை இதற்கு இடமளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
முன்னதாக, இதே மாவட்டத்தில் ஒரு வழக்கில் நீதிமன்ற உத்தரவை தவிர்க்க 144 தடை உத்தரவு பயன்படுத்தப்பட்டதை குறிப்பிட்ட நீதிபதிகள், இவ்வழக்கில் அதை செயல்படுத்தவும் பயன்படுத்தலாம் என தெரிவித்தனர்.
இந்த உத்தரவை அமல்படுத்த தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
